திருவருகையின் 4வது ஞாயிறு

முதலாம் வாசகம் 2 சாமு. 7:1-5,8b-12,14,16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார்.

அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தாக்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன்.

எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”

இரண்டாம் வாசகம் உரோமை. 16:2-27

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி லூக். 1:26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் " என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது " என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! " என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை " என்றார்.

பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் " என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.