அருள்காலம் - தவக்காலம்

திருமதி.அருள்சீலி அந்தோணி

lent2018

அன்புள்ளங்களே!
நாம் அன்பில் மலர, போராட, வெற்றி காண இறைவன் நமக்கு அருளும் பொற்காலம் தான் தவக்காலம். இறை மனித - உறவை புதுப்பித்துக் கொள்ள நமக்கு அறைகூவல் விடுப்பதே தவக்காலம். இதற்கு அவசியம் உரையாடல் தேவை. எனவே செபம் - தவம் - தர்மம் ஆகிய அறச் செயல்களினால் சாதி-சமயம்-இனம்-மொழி கடந்து இறைபணியாற்ற இறைவனோடு ஒன்றிக்கும் காலம் தான் தவக்காலம்.

மானிடா!
நம்மோடும், நம் முன்னோர்களின் வாயிலாக பேசிய இறைவன் இத்தவக்காலத்தில் அவரது பாடுகளின் உரசல்களை நம்மோடு பகிர்ந்து நம்மை மீண்டும் மிண்டும் இறை மனித - உறவில் சங்கமித்து தொடர்கின்ற இவ்வுலக பயணமே நமக்கு நிலை வாழ்வை அருளும் வாய்க்காலாக அமைகின்றது என்பதை இத்தவக்காலத்தில் உணர்ந்திடும் அழைப்பை யாம் பெற்ற பாக்கியம் என்பதை உவகையோடு நம் இதயங்களில் பதிவு செய்வோம். இவ்வுலக பயணம் நிறைவு நாளில் இறைமகனின் வலதுபக்கம் அமரும் பேற்றினை இத்தவக்காலம் நமக்கு அருள்கின்றது என்பதை உணர்ந்திடுவோம்.

இருளோடு இணைந்த இறந்தக்காலத்தை பொருளோடு அறிந்து புதுமைப்படுத்திக் கொள்ள அருள் வேண்டும் வசந்தகாலமே தவக்காலம்.

பகையோடு பயின்று பாசத்தை தொலைத்தமைக்கு பணிவோடு பரிகாரம் தேடும் அருள்காலமே தவக்காலம்! சிறுபுத்தியில் சிறைப்பட்டு சீரான வாழ்வை சிதைத்தவருக்கு சிந்தித்து வாழ சிறந்த காலம் தான் தவக்காலம்!

சதியோடு உறவாடி உறவுகளை உதறியவர்களுக்கு உணர்வோடு பொருந்திய உறவுகளை புதுப்பித்து வாழும் உன்னதமான காலம் தவக்காலம்.

நன்மைகள் நல்திடும் - புத்தொளி வீசும் அருள்காலம் தான் தவக்காலம்.

இறைமகன் இயேசுவின் துயர பாதசுவடுகளை சுழற்சி முறையில் சிந்தித்து மானிட மாசுகளை மாட்சியோடு ஏற்று மனம் மாறிடும் மேன்மைமிகு காலமே தவக்காலம்..

மானிடா!
கணபொழுதில் பார்வைகள் பரிசுத்தமாகிட, அழைப்பு விடுக்கின்றது! எனவே மனம் மாறி நற்செய்தியின் மாண்பினை உரசிப்பார்த்து பரமனோடு பரவசமாகிடவும் அழைப்பு விடுக்கின்றது.
இம் மேன்மை மிகு தவக்காலம்!