இலங்கையின் திருத்தூதர் ஜோசவ்வாஸ்

அருட்பணி. எஸ்.எயின்சிலிறொஷான். யாழ்ப்பாணம். இலங்கை.

Blessed joesph vaz pray or usஇலங்கை திருச்சபையின் தூணாக்கருதப்படும் அருளாளர் ஜோசவ்வாஸ் இலங்கையின் முதல் புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அருளாளர் ஜோசவ்வாஸ் புனிதர் பட்டம் கொடுக்கவுள்ளார்.

வழக்கமாக புனிதர் பட்டம் வழங்குவதற்கான நிபந்தனைகளுள் ஒன்று யாருக்கு அப்பட்டம் வழங்கப்படவிருக்கின்றதோ அவரை நோக்கிவேண்டுதல் செய்ததின் வழியாககுறைந்தது இரு புதுமைகள் நிகழ்ந்திருக்கவேண்டும். அப்புதுமைகள் உண்மையாகவே இயற்கைவிதிகளுக்கு அப்பாற்பட்டு கடவுளின் அருளால் நிகழ்ந்தவை என்று திருச்சபை அதிகாரிகளாலும் விஞ்ஞானிகளாலும் ஒப்புதல் பெறவும் வேண்டும். அருளாளர் ஜோசவ்வாஸ் பேரில் முதலாவது புதுமை நிகழ்ந்த நிலையில் அவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கு இரண்டாம் புதுமைக்காக காத்திருக்க வேண்டாம் என திருத்தந்தை பிரான்சிஸ் விதிவிலக்கு வழங்கியுள்ளர். இவ்வாறு பல புனிதர்களை விரைவில் ஆசியமண்ணிற்கு வழங்கவுள்ளதாகவும் திருத்தந்தை உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இலங்கையின் முதல் புனிதர் என வர்ணிக்கப்படும் அருளாளர் ஜோசவ்வாஸ் யாழ்ப்பாணத்தில் தான் முதன் முதலாக தமது புனிதபாதங்களை பதித்தார் என்பது எமக்கு பெருமை. கிறிஸ்தவவிசுவாசத்தை இலங்கையில் பரப்புகையில் எம் தமிழ் பண்பாட்டு விழுமியங்களை மதிக்கவேண்டும் என்பதில் கருத்தாய் இருந்து தமிழ் சிங்கள மொழிகளையும் கற்றுக்கொண்டார். மொழி இன வேறுபாடுகளைக் களைந்து கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளரவேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாகவும் இருந்தது.

யோசவ்வாஸ் அடிகள் இந்தியாவின் கோவாவில் பிறந்தவர். இவர் இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் (டச்சிக்காரர்கள்) அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கைக் கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி அவர்களுக்குப் பணிபுரிய வந்த கத்தோலிக்கக் குருவாவார். இவர் ஈழத்தில் யோசவ்வாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் வருகை:

கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் தூய பிலிப்பி நேரியா துறவறசபையில் (Oratary Of St. Philip Neri) இணைந்த யோசவ்வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே அவர்கள் கத்தோலிக்கரையும் குருமாரையும் அக்காலத்தில் வன்மையாக துன்புறுத்தினர். பாடசாலைகளையும்; தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலை ஊர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்கமக்களுக்கு தனதுசேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால் நடையில் 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், புநகரிஆகிய இடங்களுக்கும் சென்று கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார்.

கண்டிக்கு விஜயம்:

1693 இல் கண்டிக்குச் சென்ற ஜோசவ்வாஸ் அடிகளார் அங்கு உரோமன் கத்தோலிக்க மதத்தை மீளதாபிக்கபெரும் முயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டு ஆண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியில் இருந்தே தனது சேவையைத் தொடர்ந்த ஜோசவ்வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் குருமுதல்வராக (Vicar - General)பணிநியமனம் பெற்றார். 1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய வியாகுலமாதா கோவில் வளவில் சிறுஓலைக் கோயில் கட்டி பலி ஒப்புக்கொடுக்கும்போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.

தமிழருக்கும் சிங்களவருக்கும் பணி:

அருளாளர் ஜோசவ்வாஸ் இலங்கைநாட்டில் தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்களமக்கள் மத்தியிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வண. யாக்கோமே கொன்சால்வேஸ் திருவிவிலியத்தை தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பதற்கு உந்துதல் கொடுத்த வரும் மொழிபெயர்ப்புக்கு பிரதான காரணியுமாக அருளாளர் ஜோசவ்வாஸ் விளங்கினார். இரு மொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் தமிழ் இலக்கியங்களையும் வண. யாக்கோமே கொன்சால்வேஸ் இயற்றவும் காரணமானார் அருளாளர் ஜோசவ்வாஸ். மருதமடு அன்னை தேவாலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கு யோசவாஸ் அடிகள் துணைபுரிந்தார்.

இன்று இலங்கையின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் அருளாளர் யோசவ்வாஸ் 1995 ஜனவரி 20இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கொழும்பு வந்திருந்தபோது ஜனவரி 21 இல் காலி முகத்திடலில் இடம் பெற்ற திருச்சடங்கின் போது யோசவ்வாஸ் அடிகளார் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பெற்றார். அருளாளர் ஜோசவ்வாஸ்க்கு புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வத்திக்கான் தலைமையகத்தில் இருந்து 2014 செப்டம்பர் 17ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.