ஜூலை , 26 - வியாழன்
புனிதர்கள் சுவக்கின் - அன்னம்மாள் நினைவு
இன்றைய நற்செய்தி:

மத்தேயு13:10-17

“உங்கள் கண்களோ பேறுபெற்றவை; காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; கேட்கின்றன..”

அருள்மொழி:

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன..
மத்தேயு 13:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “உவமைகளின் வாயிலாகப் பேசுவதேன்?” என்ற சீடர்களின் கேள்விக்கு வெகு லாவகமாகப் பதிலைப் பதிவு செய்கின்றார். “பலர் மறைபொருளின் கருவூலத்தைக் கண்டும் காணாமல் மேலோட்டமாகச் செல்கின்றனர். அதே வேளையில் இறையாட்சியின் கூறுகளைக் காதால் கேட்டும் கேளாமல் அகந்தையோடு செல்கின்றனர். அத்தகையோரை ஏசாயாவின் இறைவாக்கு, “இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப் போய் விட்டது. காதும் மந்தமாகி விட்டது என்று, தானும் உணர்வதில்லை அடுத்தவரையும் வாழ விடுவதில்லை” என்று இறைமகன் சுட்டிக் காட்டுகின்றார். அதே வேளையில் தம் சீடர்களை நோக்கி, “உம் கண்களோ பேறுபெற்றவை, காண்கின்றன. உம் காதுகளோ பேறுபெற்றவை, கேட்கின்றன" என்று தம் திருத்தூதர்களை நமக்குச் சான்றாகச் சுட்டிக்காட்டி, நம்மையும் காணவும் கேட்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சுயஆய்வு :

  1. நாம் காண விரும்புவது இறையாட்சியையா?
  2. அதனைக் கேட்டு அதன்படி வாழ என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது உடனிருப்பைக் கண்டும் உணர்ந்தும் கேட்டும் வாழும் வரம் தாரும். ஆமென்..


www.anbinmadal.org