ஜூன், 13 - புதன்
இன்றைய அருள்வாக்கு

மத்தேயு. 5:17-19

“கட்டளைகளைக் கடைப்பிடித்து கற்பிக்கின்றவரே விண்ணுலகில் மிகப் பெரியவர் எனக் கருதப்படுவர்.”

அருள்மொழி :

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
மத்தேயு 5:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, திருச்சட்டத்தையும், இறைவாக்கையும் நிறைவேற்றத்தான் மண்ணுலகில் மகனாகப் பிறந்தார் என்றும் விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும், அவை யாவும் நிறைவேறும் என்றும் ஆணித்தரமாகப் பதிவு செய்கின்றார். அவற்றின் ஒரு புள்ளியோ, சிற்றெழுத்தோ ஒழியாது என உறுதியாகப் பதிவு செய்கின்றார் இயேசு. அவ்வாறே இரண்டு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி கற்பிக்கின்றவர்கள் விண்ணரசில் மிக மிகச் சிறியவராவர். இவையனைத்தையும் கடைப்பிடித்தும் கற்பித்தும் வாழ்கின்றவர் விண்ணுலகில் மிகப் பெரியவராகக் கருதப்படுபவர். எனவே நாமும் இறை வார்த்தையையும், கட்டளைகளைகளையும் கடைப்பிடித்து, அடுத்தவருக்குக் கற்பித்தும் வாழ்வோம். இவ்வுலக வாழ்வின் செயல்களே மறுவுலக வாழ்வின் அடித்தளம் ஆகும்.

சுயஆய்வு :

  1. கடவுளின் கட்டளைகளை அறிகிறேனா?
  2. அதனைக் கற்பிக்கின்றேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வாக்கும் கட்டளைகளும் என் வாழ்வின் நங்கூரமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org