இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:54-58

“தம் சொந்த ஊரிலும், வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.”

அருள்மொழி :

இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.இயேசு அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார்.
மத்தேயு 13:57

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு உவமைகள் வாயிலாகப் பேசிய பிறகு, தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்து தொழுகைக் கூடத்தில் போதிக்கலானார். இவரது போதனைகளைக் கேட்ட மாத்திரத்தில் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இவருக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? இவர் தச்சர் மகனல்லவா? இவர் சகோதர, சகோதரிகள் நம்மோடு இருக்கின்றார்களே" என்று திகைப்பில் ஆழ்ந்ததைக் கண்ணுற்ற இயேசு, “தம் சொந்த ஊரிலும், வீட்டிலும் தவிர, இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்று இறைமகனே இவ்வாறு பதிவு செய்கின்றார். கடவுளின் மகனுக்கே இந்நிலை என்றால், மானிடராகிய நாம் எம்மாத்திரம்? சற்றுச் சிந்தித்து, நற்செய்திப் பணியினைத் தொடர்ந்து ஆற்றிட ஊக்கம் பெறுவோம். இன்று மே 1, உழைப்பாளர் தின விழாவை தாய் திருஅவை கொண்டாடி மகிழ்கின்றது. உழைப்பாளரின் தலைவனாக புனித யோசேப்பை நினைவுகூர்ந்து ஆற்றல் பெறுவோம்.

சுயஆய்வு :

  1. நற்செய்தியைப் பறைசாற்ற என் மனநிலை யாது?
  2. நற்செய்தியே என் வாழ்வின் அடித்தளம், உணர்கின்றேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது மீட்புத் திட்டத்தில் நானும் ஓர் அங்கமாகிடும் வரம் தாரும். ஆமென்..