அருள்வாக்கு இன்று

ஜனவரி-1, வெள்ளி

இன்றைய நற்செய்தி

லூக்கா 2:16-21

இயேசு பெயர் சூட்டு விழா - அன்னை மரியாள் இறைவனின் தாய்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்." லூக்கா 2:21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் மண்ணில் வந்துதித்த குழந்தைப் பாலகனுக்குப் பெயர் இயேசு எனும் நாமம் சூட்டி மகிழ்ந்தனர். விண்ணின்று விடியல் மண்ணை நோக்கி அன்னை மரியின் வழியாக இவ்வுலகை வென்றெடுக்க வந்த விமலனுக்குப் பெயர் சூட்டுவிழா! இந்நாளே புத்தாண்டும் புலர்ந்துப் புவியோரை மீட்டெடுத்தது. எனவே தான் ஜனவரி முதல்நாள் அகிலமே கொண்டாடி மகிழும் நாளாக அமைந்தது. எங்குப் பார்த்தாலும் புத்தாண்டின் மகிழ்ச்சி வெள்ளம் காண்போர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் அமையும். இந்த மாபரனைப் பெற்றெடுத்த அன்னையை மகிமைபடுத்தும் நாளாகவும் அமைந்தது. "இயேசு" எனும் நாமம் விண்ணோர், மண்ணோர், கீழுலுகோர் அனைவரும் மகிழும் நாளாகும்.

சுய ஆய்வு

  1. அன்னை மரியாளின் மகிமையை உணர்கிறேனா?
  2. உணர்ந்து அதனை என் வாழ்வில் கடைபிடிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு மழலை மன்னவா! உம் நாமம் எளியோர் உள்ளத்தில் பதிவு செய்ய எனக்கு வரம் தாரும். ஆமென்.

இயேசுவின் இனிய நாமத்தில் நெஞ்சுக்கினிய உள்ளங்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பின்மடல் முகப்பு