ஜனவரி, 10 - வியாழன்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 4:14-22

"இவர் யோசேப்பின் மகன் அல்லவா?”

அருள்மொழி :

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
லூக்கா 4:22

வார்த்தை வாழ்வாக:

கடவுளை காண கடும் தவம் புரிந்து காடு மலை என சுற்றித்திரியும் மனிதன் அந்த கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட தன் அயலானில் அக்கடவுளை காண மறுக்கிறான். கடவுளை அன்பு செய்வதாக கூறிக்கொண்டு தன் சக மனிதர்களை எதிரியாக காணும் எவனும் தன் கடவுளையே எதிரியாக பார்க்கிறான். இதை எத்தனை பேர் உணர்கிறோம்? இதை உணராத உள்ளங்களில் தீ மூட்டுகிறார் யோவான். அயலானில் கடவுளை காண்போம் என்கிறார் யோவான். யார் செய்த புண்ணியமோ? அந்த கடவுளே நம் அயலானாக வந்தார். அவர் நம்மிடையே குடிகொண்டார். அவர் மொழிந்த வார்த்தைகளில், வியப்படைந்த மக்கள், அவர் அருள்பார்வையில் மயக்கமுற்ற மக்கள், அவர் சொல் ஒன்றில் குணம் பெற்ற மக்கள் அவரை வியப்புக்குரிய மனிதராக பார்த்தார்களேயன்றி அவரை இறைவார்த்தையின், திருச்சட்டத்தின் முழுமையாக, இறைமகனாக, பார்க்க தவறினார்கள். கூட்டத்தில் இருந்து கொண்டு நிழல் உலகின் கதாநாயகன் திரையில் கண்டு ஆர்ப்பரிக்கும் நாம் நம் சக நண்பனை நிஜ உலகின் கதாநாயகனாக ஏற்க மறுக்கிறோம்.

சுயஆய்வு :

  1. என் அயலானை நான் அன்பு செய்ய, அவனிலே கடவுளைக்காண என்னை தடுப்பது எது?
  2. எனது ஆணவமா? தற்பெருமையா ? அல்லது அறியாமையா?
  3. எனது துன்பத்தில் உதவும் மனிதரை கடவுளாக பார்க்கும் நான், அடுத்தவரின் துன்பத்தில் உதவிக்கரம் நீட்டுகிறேனா ?

இறை வேண்டல்:

என்னைக் காண உடலெடுத்த என் இறைவா மனிதரில் உன்னை காணும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org