ஜனவரி, 9 - புதன்

இன்றைய நற்செய்தி:
மாற்கு 6:45-52

"துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்"

அருள்மொழி:

ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்;
மாற்கு 6:50

வார்த்தை வாழ்வாக:

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் நம் மனதில் இருந்தாலும் நம்மிடம் பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இயேசுவின் சீடர்கள் இயேசுவை பேய் என்று எண்ணி பயப்படுகிறார்கள். இயேசு அவர்களின் உள்ள கலக்கத்தை அறிந்து அவர்களை தைரிய படுத்துகிறார். "துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்." அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். ஆம், இயேசுவின் பிரசன்னத்தை உணராத சீடர்கள் இயேசுவையே பேய் என்று எண்ணுகிறார்கள். நம் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று விசுவாசிக்கும் போது நம்மில் அச்சம் என்ற செடி முளைக்காமல் போகிறது. அதே சமயத்தில் நாம் இறை பிரசன்னத்தை உணராதபோது நம்மில் அச்சம் மற்றும் அது சார்ந்த அனைத்து எண்ணங்களும் ஆணிவேர் கொண்டு முளைக்கிறது. நம் ஆண்டவர் 'இம்மானுவேல்' அதாவது கடவுள் நம்மோடு இருக்கிறார் (மத்தேயு 1:23). நம் இறைவன் நம்மோடு இருக்க நாம் யாருக்காக அஞ்ச வேண்டும் யாரை கண்டு நடுங்க வேண்டும்.

சுயஆய்வு:

  1. நம் இயேசு 'இம்மானுவேல்' என்பதை விசுவசிக்கிறோமா?
  2. நாம் நற்கருணையை ஒவ்வொரு நாளும் உண்ணும்போது இயேசுவின் பிரசன்னத்தை உணர்கிறோமா? இயேசுவாக மாறுகிறோமா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே நீர் இம்மானுவேல் என்பதை நான் உணர்ந்து என்றும் துணிவோடு இருக்க வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org