*ஜனவரி, 8 - செவ்வாய்*

இன்றைய நற்செய்தி:

மாற்கு 6:34-44

"அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்."

அருள்மொழி :

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
மாற்கு 6:34

வார்த்தை வாழ்வாக:

எதைக் கொண்டு வந்தோம் அதைக் கொண்டு செல்ல கொடுப்பதில் இன்பம் பெறுவதில்லை என்று மகிழ்ச்சியோடு பாடுகிறோம் நாம். அது உண்மையே. இதை உய்த்து உணர்ந்த இயேசு ஆயில் இல்லாத ஆடுகளாய் தவித்து நின்று தம்முடைய போதனையை கேட்க வந்தவர்களை பசியோடு அனுப்பாமல் அவர்கள் உண்பதற்கு ஏதேனும் கொடுக்க வாஞ்சிக்கிறார் . ஆனால் எதிர்மறை எண்ணம் கொண்ட சீடர்களோ எவ்வளவு பேருக்கு உணவா! என்று புருவத்தை உயர்த்தி, வியந்து , விழி பிதுங்கி 'இயலாது' என்று கூறுகிறார்கள். இயேசு அவர்களின் எண்ணங்களை மாற்ற அவர்களிடம் உள்ள ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி கடவுளுக்கு நன்றி கூறி பிட்டு மக்களிடம் பகிர முன்வருகிறார். மக்களும் தங்களிடம் உள்ளதை பகிர முனைகிறார்கள். அங்கே அது பெரிய விருந்தாகிறது. நாம் நம்மிடம் உள்ளதை பிறரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே இயேசு கற்பிக்கும் பாடம். இந்த சமூகத்தில் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு நிறைய இருப்பதன் காரணம் நம்மிடமுள்ள சுயநலம். ஒருவன் செல்வந்தனாகவும் மற்றொருவர் ஏழையாகவும் பிறப்பது விதி என்று எண்ணாமல் இருப்பவர் இல்லாதவரிடம் பகிர்ந்து வாழும் போது வாழ்க்கை பொருள் பெறுகிறது.

சுயஆய்வு :

  1. நம்மில் எத்தனை பேர் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்கிறோம்?
  2. கிறிஸ்துவத்தின் மெய்ப்பொருள் அப்பம் பிடுதலும், பகிர்தலுமே . இதை நாம் விசுவாசிக்கின்றோமா?
  3. ஏழைகளை ஏளனமாக பார்த்து ஓரம் தள்ளுகிறோமோ? அல்லது அவர்களை மனிதர்களாக மதிக்கிறோமா?

இறை வேண்டல்:

இறைவா என்னிடம் உள்ளதை பிறரோடு பகிர்ந்து வாழும் தாராள மனதை தாரும்..


www.anbinmadal.org