அன்பின்மடல்

ஜனவரி 7-திங்கள்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 4:12-17,23-25

"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது"

அருள்மொழி :

அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
மத்தேயு 4:17

வார்த்தை வாழ்வாக:

காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் என்று நம் நண்பர்களும் தெரிந்தவர்களும் கூறி நான் கேட்டிருப்பது போல மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று குருக்களும் கன்னியர்களும் மேலும் நம் நண்பர்களும் கூட ஜெபக்கூட்டங்களில் கூறக் கேட்டிருப்போம். அவற்றின அகலம், ஆழம், நீளம் மற்றும் உயரம் என்ன? மாற்றம் எங்கும் இருப்பது: பிற மனிதர்களும், உயிரிலும், பொருட்களிலும் காண்பது. ஆனால் மனமாற்றம் என்பது நாம் தனிப்பட்ட முறையில் முதலில் நம்மில் காண்பது. மாற்றம் வெளிப்படையானது ஆனால் மனமாற்றம் உள்ளார்ந்து. மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொடுத்து மனம் மாறாத சூழலை நாம் கண்கூடாக பார்க்கிறோம். நியூட்டனின் மூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் எனும் இது போன்ற தத்துவத்திற்கு ஏற்ப பாவம் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் மனம் வருந்தி மனம் திருந்தி தூயவர்களாக வேண்டும் என்பது இறை அழைத்தல். ஆனால் ஒரு சிலர் சிறுவயதில் அல்லது இளவயதில் மனமாற்றம் என்ற கனியை சுவைத்து இறைமக்களாக, தூயவர்களாக வாழ் கின்றனர். மேலும் ஒருசிலர் சாகும் தருவாயில் தான் சுவைக்கிறார்கள் மற்றும் பலர் கடவுளின் அன்பை பெரிதும் சுவைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

சுயஆய்வு :

நாம் எப்போது மனமாற்றம் என்ற கனியை சுய ஆய்வின் மூலம் சுவைத்து விண்ணரசில் நுழைய தயாராக போகிறோம். மனமாற்றம் என்ற கனியை சுவைக்க தடையாக இருப்பது என்ன? பணமா? பொருளா? பதவியா?

இறை வேண்டல்:

ஆண்டவரே உன் பிள்ளைகளாக வாழ எதெல்லாம் தடையாக இருக்கின்றதோ அவை அனைத்தையும் நீக்கி மனமாற்றம் பெற்றவர்களாக வாழ வரம் தாரும்.


www.anbinmadal.org