ஜனவரி 6 - ஞாயிறு
ஆண்டவரின் திருக்காட்சி விழா

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 2:1-12

"வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்."

அருள்மொழி :

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். .
மத்தேயு 2:1-11

வார்த்தை வாழ்வாக:

பெற்றோரின் முகத்தை தன் முகத்தில் இணைத்துக் காட்டும் குழந்தை பிறப்பு அதிசயம் மற்றும் மகிழ்ச்சி என்பார்கள் பாரினை படைத்த பரமனே பாரில் பிறப்பது மாபெரும் அதிசயம் மற்றும் மட்டில்லா மகிழ்ச்சி. இதுவே உண்மை சாத்தியம் என்கிறது ஞானிகளின் செயல்கள். ஆனால் மன்னன் ஏரோதின் நிலை ஞானிகளின் நிலைக்கு எதிர்மறையாக உள்ளது. கிறிஸ்துவின் பிறப்பில் ஞானிகள் மகிழ்ந்தனர் மன்னன் ஏரோது கலங்கினான். ஞானிகள் பிறந்த இயேசு பாலகனை வணங்கச் சென்றனர், ஏரோது கொலை செய்ய திட்டம் தீட்டினான். ஞானிகள் சுமந்து சென்றது பொன், தூபம், வெள்ளைப்போளம், மன்னன் ஏரோது சுமந்து சென்றது படை கருவிகளும் போர்வீரர்களும். ஞானிகளின் உள்ளமோ மகிழ்ச்சி, அமைதி, பொறுமை மற்றும் தாழ்ச்சி முதலியவற்றை அணிகலன்களாக கொண்டிருந்தது ஆனால் மன்னன் ஏரோதின் உள்ளமோ கலக்கம் ,பயம், துரோகம், பொறாமை மற்றும் ஆசை முதலியவற்றை கவசமாக கொண்டிருந்தது.

சுயஆய்வு:

  1. நம் ஆண்டவர் இயேசு பாலகனின் பிறப்பு நமக்கு உண்மையில் மகிழ்ச்சியா அல்லது கலக்கமா?
  2. கிறிஸ்துவின் பிறப்பு நம் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை கொணர்கிறதா அல்லது எதிர்மறையான மாற்றத்தை கொணருகின்றதா ?
  3. கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் நமக்கு பிறர் நலத்தை சார்ந்ததாக இருக்கிறதா அல்லது சுயநலத்தை சார்ந்ததாக இருக்கிறதா?

இறை வேண்டல்:

ஆண்டவரே உலக நாட்டங்களில் உழன்று கிடக்கும் நான் உமது அருளால் அனைத்தும் குப்பை எனக்கருதி நீரே நிலையான செல்வம் மகிழ்ச்சி என்ற உண்மையை அறிந்து உம்மை காணவும் உம்மையே பிரதிபலிக்கவும் அருள்தாரும்.


www.anbinmadal.org