ஜனவரி-4
வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 1:35-42

"மெசியாவைக் கண்டோம்"

அருள்மொழி :

அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். "மெசியா" என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்..
யோவான் 1:41

வார்த்தை வாழ்வாக:

"மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்" ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மீட்பரை எதிர்நோக்கி இருந்த மக்கள் அவர் வரும் காலத்தை கோடிக் கண்கள் கொண்டு காண விழைந்தனர். தரணியிலே மலர்ந்த மனிதரில் சிறந்தவரான யோவான் , இயேசுவை கடவுள் அருளிய மீட்பராக உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றார். யாருக்கு கிட்டும் இப்பேர்ப்பட்ட பாக்கியம்? தன்னை உருவாக்கியவரையே உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் திருமுழுக்கு யோவான். இயேசுவை யார் என கண்டுகொண்ட யோவானின் சீடர்கள் இயேசு 'அனுபவத்தை' பெற முற்படுகிறார்கள், இயேசுவோடு தங்குகிறார்கள். அந்த சீடர்களின் 'இயேசு அனுபவம்' அத்தோடு முற்று பெறவில்லை. தாங்கள் அறிந்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவ வாழ்வின் அடித்தளம் இதுவே : "அறிதலும், அறிவித்தலும்". கிறிஸ்துவை அறிபவர் அவரோடு தங்குகிறார், உறவாடுகிறார், பெற்ற இறை அனுபவத்தை பகிர்கிறார். கிறிஸ்துவை அறிந்தவன் அன்பின் அடையாளமாக மாறுகி்றான், அன்பை பறைசாற்றுகிறான்.

சுயஆய்வு :

  1. நம்மில் எத்தனை பேர் இயேசுவைப் பற்றி அறிய, அவரை அனுபவிக்க ஆசைப்படுகிறோம்?
  2. வாழ்வை சுகபோகமாக மாற்றக்கூடிய இன்றைய 'நுகர்வு கலாச்சாரம்' நம்மை அலகையின் பிள்ளைகளாக்கி மகிழ்கிறது. கேலிக்கூத்தாட்டங்களுக்கு நேரம் ஒதுக்கும் நாம் காலங்களைக் கடந்து நம்மை அன்பு செய்யும் இறைவனுக்கு நேரம் ஒதுக்குகிறோமா?
  3. அவரை அறிய காலம் தாழ்த்துகிற நாம் எப்போது அவரை மீட்பராக ஏற்றுக் கொள்ளப் போகிறோம்?

இறைவேண்டல்:

மனிதர்கள் காண மனுவுரு எடுத்த மனு மகனே என் இறைவா! உம்மை அறிய, அனுபவிக்க, அந்த அனுபவத்தால் உம்மை பறைசாற்ற வரம் தாரும்.ஆமென்.


www.anbinmadal.org