ஜனவரி, 3 - வியாழன்
இன்றைய நற்செய்தி

யோவான் 1:29-34

"ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்."

அருள்மொழி :

மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.என்றார்..
யோவான் 1:29

வார்த்தை வாழ்வாக:

பாவத்தின் சம்பளம் மரணம் (உரோமையர் 6: 9) பாவம் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. பாவத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி இறைமகன் இயேசு கிறிஸ்துவே. அன்று இஸ்ரயேல் மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆடுகளை பாவம் போக்கும் பலியாக, மீட்பின் பலியாக, வாழ்வின் பலியாக, கடவுளுக்கு காணிக்கையாகவும், தங்களின் பாவம் போக்கும் பலியாகவும் கொடுத்தனர். ஆனால் திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை கடவுளின் செம்மறியாகவும் நம் பாவம் போக்கும் பலியாகவும் சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறே இயேசு இறுதியில் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து நம்மை பாவத்திலிருந்தும், சாவிலிருந்தும் விடுவித்து நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரது பலியில் பங்கெடுக்கும் நாம், எவ்வாறு நம்மை கடவுளின் செம்மறியாகவும், பிறரின் மீட்புக்கு பலியாகவும் ஒப்புக்கொடுக்க முற்படுகின்றோமா? பிறரின் உழைப்பில், வியர்வையில், ரத்தத்தில் வாழ ஆசைப்படும் நாம் ,நம் உழைப்பை, வியர்வையை, இரத்தத்தை பிறர் வாழ கொடுக்க முற்படுகின்றோமா?

சுயஆய்வு :

உலக வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, உலக நாட்டங்களில் கலந்து, பணம,பதவி, பேராசைகளுக்கு அடிமையாகி போன நமக்கு பாவமும் புரிவதில்லை, கடவுள் பயமும் தெரிவதில்லை. உலகோடு ஒன்றி கடவுளை விட்டு விலகிய நாம் நம் பாவத்திற்காய் பல நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் நிறைவேற்றி பாவத்தை போக்கி விட்டதாய் மிதந்து கொண்டாடுகின்றோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே உன்மேல் நிலையான நம்பிக்கை கொண்டு மண்ணுலக வாழ்வை விடுத்து விண்ணுலக வாழ்வுக்கு தயாராகும் நாங்கள் பிறர் வாழ எங்களை பலியாக கொடுக்க வரம் தாரும்.


www.anbinmadal.org