arulvakku

ஜனவரி, 2 - புதன்
இன்றைய நற்செய்தி

யோவான்1:19-28

"நீர் யார்?"

அருள்மொழி :

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, "நீர் யார்?" என்று கேட்டபோது அவர், "நான் மெசியா அல்ல" என்று அறிவித்தார்.
யோவான்1:19

வார்த்தை வாழ்வாக:

மனித வரலாற்றிலும், உலக வரலாற்றிலும், தத்துவம் தழைத்தோங்கிய காலத்திலிருந்தும் கேட்கப்பட்ட கேள்வி "நான் யார்?" தன்னை அறிதலே பிறரை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்குமான முதல் நிலை. இறைமகன் இயேசு கிறிஸ்துவின் காலகட்டத்தில் வாழ்ந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் மெசியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்கள். ஆனால், மெசியாவை பற்றிய புரிதல் அற்றவர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். காரணம் , தன்னை அறியாமலும், புரியாமலும் காலத்தை நகர்த்தி அறிதலற்று, புரிதலற்று இருந்ததால் திருமுழுக்கு யோவானின் செயல்களைப் பார்த்து நீர் யார் என்று கேட்க தொடங்கினார்கள், தவறாக புரிந்து கொண்டார்கள். தன்னையும் பிறரையும் புரியாததால் அவர்கள் மத்தியில் அவர்களோடு வாழ்கின்ற இயேசுவையும் அடையாளம் கண்டுகொள்ள தவறி விடுகின்றார்கள். இயேசுவே மெசியா என்று ஏற்றுக்கொள்ள மறந்து மறுத்து விடுகின்றார்கள். நாமும் நம்முடைய வாழ்விலே அடுத்தவர் வாழ்க்கையை பார்த்து பார்த்து பழகி வாழ்ந்த நமக்கு தன்னைப்பற்றிய புரிதலும் அறிதலும் மறைந்துவிட்டன. எனவே நம்முடன் வாழ்கின்ற நம் இயேசுவை, உறவாடுகின்றன தெய்வத்தை, உயிரா கின்ற கடவுளை அறியவும், புரியவும், மறந்து விடுகின்றோம்.

சுயஆய்வு :

  1. நம் வாழ்வில் என்றாவது நம்மையே நாம் சரியாக புரிந்து வாழ்கின்றோமா?
  2. நம்முடைய புரிதல் ஆன்மீக புரிதலா அல்லது ஊடகங்களுடன் வாழ்கின்ற ஊடக புரிதலா?
  3. பல்வேறுபட்ட ஊடகங்களையும், செயல்பாட்டையும் சரியாக புரிந்து கொண்ட நாம் தினமும் நம்மோடு உறவாடும், உயிராகும் நம் இறைமகன் இயேசுவை புரிந்து கொள்கின்றோமா?

இறைவேண்டல்:

இறைவா ! எம்மில் எழும் கேள்விகளுக்கு புரிதலுடன் பதில் கண்டு உன் அருளையும் ஆசீரையும் பிறருக்கு கொடுத்து உம்மை போதிக்கும் அருளை நிறைவாக தாரும்.


www.anbinmadal.org