கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம்
ஒரு பார்வை

இந்தியாவில் குறிப்பாக தமிழக ஆயர் பேரவையின் அனுமதியின் பெயரில் கிறித்தவர்களின் வாழ்வு நிலை பெரும்பாலும் ஒரே சிந்தனையை ஒட்டியே இருந்தது. செபம் - தவம் - வழிபாடு போன்றவற்றில் முக்கியத்துவம் காணப்பட்டது. கிறித்தவர்களிடையே பல பிரிவுகள் தோன்றியதாலும், ஆட்சியாளர்களின் ஒட்டு மொத்த கவனம், கிறித்தவர்கள் மீது அதிகம் அக்கறை காட்டவில்லை. காரணம், அவரவர் தேவைகளை குறிப்பாக கிராமபுறங்களில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் தரத்தை உயர்த்த கிறித்தவ நிறுவனங்களும், அதனைச் சார்ந்துள்ள பொறுப்பாளர்களும் மக்களுக்கு தொண்டு செய்வதில் முழு கவனம் செலுத்தியது. இந்நிலையில் தான் அரசும் அவர்கள் மேலை நாடுகளின் உதவிபெற்று பணி செய்கிறார்கள். அவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதில் மெத்தனம் காட்டியது.

மேலும் கிறித்தவர்களின் ஒட்டு மொத்த ஓட்டுரிமைகளை, நாம் எப்படியும் பெற்று விடலாம் அவர்கள், போராளிகள் அல்ல. ஏமாளிகள் தான்!" என்ற நிலை தலை தூக்கியது. சமீபகாலமாகத் தான் அரசியல் கட்சிகளிடையே கிறித்தவர்களின் மீது ஒட்டு மொத்த பார்வை விழுந்தது. எனவே கிறித்தவர்களிடையே சாதி என்ற பெயரில் கட்சிகள் துவங்க தூண்டுதல்கள் அளிக்கப்பட்டு, சாதி அடிப்படையில் நம்மவரிடையே தலைவர்கள் தோன்றினார்கள். இதனால் நமக்குள் இருந்த ஒட்டு மொத்த கருத்து சிதைவு ஏற்பட்டது. இந்நிலை நீடித்தால் அரசியல் பார்வையில் நம் நிலை மாற்றம் காணும் என்ற நிலை ஒரு சில அருட்பணியாளர்களின் கவனத்தை ஊடுருவியது. எனவே நமது அருட்பணியாளர்கள் சட்டத்தை எடுத்து படிப்பது மட்டுமல்லாமல் மக்களிடையே தனி கவனம் செலுத்தலாயினர். இந்நிலையில் தான் தமிழக ஆயர்கள் பேரவை ஒட்டு மொத்த கவனம் திரும்பியது.

எப்படியெனில் ஆங்காங்கே மதவாதம் - வகுப்புவாதம் போன்ற கிளர்ச்சிகளை உருவாக்கி இந்துத்துவ அமைப்புகள், கிறித்தவர்களின் தொண்டுகளை ஏற்க மனமுடையாதவர்களாய் - ஒரிசா அருட்கன்னியர்கள் - கோவில்கள் - காருடன் மக்களை தீ வைத்தும் - குஜராத், மீண்டும் ஒரிசாவில் அண்மையில் நடந்த தேவாலயங்கள் மற்றும் ஆதிவாசிகளின் மீது அவர்களின் தீவிர தாக்குதல்கள் தொடர் வாதங்களாக உருவாகி பெருகி நம் மக்களை அழிக்கும் நிலை உருவாகியுள்ளது.

நாம் இம்மண்ணின் மைந்தர்கள். நமது உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நம்மிடையே பல போராளிகள் எழ வேண்டும். எந்த வித திடீர் தாக்குதல் வரும் நேரங்களிலும் நமது குடியுரிமையை நிலை நாட்டவும், முதலில் நாம் தெளிவு பெற வேண்டும். கிறித்தவ மறை பரப்பு பணியில் நமக்கு முன் அநேக புனிதர் புனிதைகள் தங்களின் குருதியைச் சிந்தி நம்மை மீட்டெடுத்து, நமது முன்னோர்களின் தியாகமே!!

அண்மையில் நமது நாட்டிற்கு குடி வந்து நமது முன்னிலையில் சமுதாயத்தில் சிதறுண்டு போன அடிதட்டு மக்களுக்கு சேவைகள் பல புரிந்து பல துன்பங்களுக்கிடையில் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை கொல்கத்தா மண்ணில் அருந் தொண்டாற்றி தன்னையே அர்ப்பணித்தவர் அன்னை தெரசா அவர்கள், இன்று நம் கண் முன்னே தோன்றிய புனிதையாவார்.

எனவே இச்சமுதாயத்தில் கிறித்தவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தட்டி கேட்கவும் குரல் கொடுக்கவும் ஓர் இயக்கம் நமக்கு தேவை. எனவே அருட் பணியாளர்கள் முதல் துறவிகளின் ஒட்டு மொத்த உழைப்பினால் 'கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம்" தோன்றியது. இது நமது குருதியில் - நம் மண்ணில் - ஊன்றிட ஒவ்வொரு ஒட்டு மொத்த கிறித்தவனும், கடல் அலை போல் திரண்டெழ இவ்வியக்கம் அழைக்கின்றது.

இது ஓர் இயக்கம் தான். இதில் எந்தவித அரசியல் கட்சிகளின் நச்சு காற்றினால் கட்டி எழுப்ப நமது திருச்சபை விரும்பவில்லை. மேலும் இயேசு இவ்வுலகின் மாட்டு குடில் வருகை - வளர்ச்சி - 12ஆம் வயதில் அவரது எருசலேம் தேவாலயத்தின் அவலநிலை - அவரை ஓர் புரட்சியாளனாக காட்டியது. எப்படி எனில் அங்கே ஆலயம் என்ற பெயரில் நடந்த அநீதி - கொடுமை - அடிதட்டு மக்கள் புறக்கணிப்பு - காணிக்கை என்ற பெயரில் சுரண்டல் - பெண்ணடிமை - சமத்துவமின்மை - அதிகார போக்கு அனைத்தையும் ஒரு கண பொழுதில் கண்டார். வீராவேசம் கொண்டு அநீதியை கண்டித்து, சாட்டையடி கொடுத்தாரென்றால், இதுவும் நமக்கு இறைமகன் வெளிப்படுத்திய இளமை புரட்சி போர்! அவருடைய மறையுடலாக உள்ள நமக்கும் இவ்வுணர்வு அவசியம் ஊன்றியிருக்கும். அதனை நாம் இனம் கண்டு கொள்ள இந்த கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. மறவாதீர்!

'விடுதலை நாயகன் இயேசு" ஒட்டு மொத்த பாதிக்கப்பட்டோர் விடுதலைக்காக தன் தந்தையின் விருப்பப்படி இம்மண்ணகம் நோக்கி வந்தார். நீதி அவமதிக்கப்படும் போதும், நீதிக்காக போராடுபவர்கள் அநியாய தீர்ப்பிற்கு உள்ளாகும் போதும், நாம் பொங்கியெழவே இறைமகன் 'இவ்வுலகில் தீயை மூட்டவே வந்தேன்" என்றார். அவர் அமைதிக்காகவும், எல்லாரும் எல்லாம் பெற வேண்டும். சமத்துவம் - சகோதரத்துவம் - பகிர்வு - நீதி - நேர்மை ஆகிய மதிப்பீடுகளை இம்மண்ணகம் காண வேண்டும் அன்று தான் இறையாட்சி மண்ணகம் காணும் என்ற 'விருது வாக்காக" நமக்கு அளித்து சென்றுள்ளார். ஆனால் நமது நிலை என்ன? சிந்திப்போமா? கடன் திருப்பலி - அருளடையாளங்கள் முறையே பெற்று தன் வாழ்வை மட்டும் நோக்கும் நிலையில் தான் இன்று நாம் இருக்கின்றோம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கடந்த கால கிறித்தவர்களின் நிலை ஆபிரகாம் முதல் இயேசு வரை மக்களின் அதிகார போக்கை சற்று சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் காலத்தை மறுவாசிப்பு செய்து அதை இன்றைய சூழலில் மக்களின் நிலை என்ன? என்பதையும் பிரித்து பாருங்கள். அப்போது தான் நமது நிலை புரியும். இயேசுவின் தாக்கம் என்னவென்று புரியும். அவரது மதிப்பீடுகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு செல்லவே 'கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம்" அழைப்பு விடுக்கின்றது. மற்ற சமயங்களிலும் அமைப்புகள் உள்ளன. அவை சுயநலத்தின் அடிப்படையில் இயங்கி அரசியல் கலவையாக மாற்றுகின்றது. இதனால் நம் போன்ற சிறுபான்மையினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நேரங்களில் தான் விழிப்புணர்வு பெற வேண்டும். நம்மிடையேயுள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி வட்டம் மறை மாவட்டம் வாயிலாக இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஊட்டி அவர்களுடன் நாமும் உறுப்பினர்களாக இணைந்து இறைமகனின் கனவை நனவாக்க வீறு கொண்டெழுவோம். ஓர் அணியாக கோட்டை முதல் குமரி வரை நமது பயணம் தொடர வேண்டும். 'உரிமைக் குரல்" ஒரு கோடி முனை முதல் பூமியின் மறுகோடி முனை வரை ஒலிக்க நாம் ஓர் இயக்கமாக திரள்வோமா? 'கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம்" அளிக்கும் மறை மாவட்டம் - வட்டம் அளிக்கும் ஆக்க பயிற்சிகளை ஏற்போம். தெளிவுகளை பெறுவோம். சமுதாயத்திற்குள் ஊடுருவிச் சென்று சிதறிக் கிடக்கும் மக்களை சாதி - சமயம் - இனம் - மொழி போன்ற நச்சுக் கிருமிகளை அறவே அழித்து இயேசுவின் அறப் போரை தொடருவோம் வாரும் இறைமக்களே!

இறைமகன் இயேசு பிலாத்துவின் முன்னிலையில் தான் சிலுவைச் சாவிற்கு கையளிக்கப்படும் போது! 'நீர் யூதனின் அரசனா?" என்ற பிலாத்துவின் கேள்விக்கு, இயேசுவின் பதில், 'என் அரசு இவ்வுலகை சார்ந்த்து அன்று" கூறுகிறார்- இதன் விளக்கம் - இம்மண்ணகத்தில் அதிகாரத்தின் அடிப்படையிலும் சாதி வெறியின் அடிப்படையிலும் அநீதி போன்றவற்றில் கட்டப்பட்டுள்ளதாகும். என் ஆட்சியோ நீதி நேர்மை - அன்பு - பகிர்வு - சமத்துவம் - சகோதரத்துவம் போன்றவைகள் என்று இம்மண்ணகத்தில் ஊன்றப்பட்டு அது ஆலமர விழுதுகளைப் போல் தழைத்து பரந்து விரிந்து அனைவரும் இறைவன் படைப்பில் சமம் என்ற நிலை மாறும் போது, 'நான் கண்ட இறையரசு மலரும் என்பதே இதன் கருப்பொருள். எனவே தனி மனித உரிமைக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த கிறித்தவர்களின் உரிமைக்காக ஒன்று திரள்வோம் வாரீர். ஓர் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கமாக.

வாழ்க இயேசுவின் கனவு நனவாக!
வளர்க கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம்!