advent19

தொகுத்து வழங்கியவர் திரு இரான்சம் அமிர்தமணி

hope
peace
happy
love

முதல் வாரம்

இரண்டாம் வாரம்

மூன்றாம் வாரம்

நான்காம் வாரம்

ஞாயிறு, டிசம்பர் 1

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

மன்றாட்டு:
எங்கள் எதிர்நோக்கின் கடவுளே, எழுந்து வருவீர்! உமது வார்த்தையை எங்கள் இதயத்தில் வரவேற்கிறோம். எங்கள் வாழ்விலே உமது உடனிருப்பையும் இந்த உலகின் மீது நீர் கொண்டுள்ள எதிர்நோக்கையும் உணர்ந்து நாங்கள் விழிப்பாயிருப்போமாக. தன்னல விருப்பங்களிலிருந்தும் அக்கறையில்லாத நிலையிலிருந்தும் விடுபட்டு நாங்கள் வெளிவரச் செய்தருளும். பிரிவினை தவிர்த்து, ஒன்றிணைப்பவர்களாக, அழிவை விடுத்து, கட்டி எழுப்புவர்களாக, இருளை விலக்கி, ஒளியைப் பரப்பும் மக்களாக நாங்கள் வாழ்ந்திட உதவியருளும். இந்த உலகிற்கான உமது நோக்கத்தையும், விருப்பத்தையும் எங்கள் குறிக்கோள் ஆக்கி, அதை நோக்கி நாங்கள் செயலாற்றுவதற்கான ஞானத்தையும், துணிவையும், வலிமையையும் எமக்குத் தருவீராக! ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

திங்கள், டிசம்பர் 2

முன்மொழி: புரிதலை வழங்கும் ஆவியே, எழுந்து வாரும்!

மறைநூல் (எசாயா 11:2)
“ஆண்டவரின் ஆவி அவர் மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்”

மன்றாட்டு:

புரிதலை வழங்கும் ஆவியே, வருவீர்! எம் இதயங்களைப் பற்றிக் கொள்வீர். அடுத்தவர்களின் சிந்தனை, செயல் மற்றும் தூண்டுதலை நாங்கள் புரிந்து கொள்ளவே இயலாத தருணங்களில், அவர்களின் நயமான தனித்தன்மையை எங்களுக்கு நினைவூட்டியருளும். புரிதலின் ஆவியை எம்முள்ளே பொழிந்தருளும். பேசப்படுகின்ற வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கின்ற உண்மைகளை ஆழ்ந்து உணர்வதற்கான பொறுமையை நாங்கள் கடைபிடித்து வாழ்ந்திட துணை செய்வீராக! அமைதியான மனதுடன் அடுத்தவரை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதற்கான மனப்பக்குவத்தை நாங்கள் கண்டுணரச் செய்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

செவ்வாய், டிசம்பர் 3

முன்மொழி: சின்னஞ்சிறு குழந்தையே, வருக!

மறைநூல் (எசாயா 11:6)
“அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்”.

மன்றாட்டு:
சின்னஞ்சிறு குழந்தையே, வருக! குழந்தை மனம் கொண்டிருந்தாலே, இயேசு எங்களை வரவேற்கிறார் என்பதையும், அதன் விளைவாகவே உமது அரசை நாங்கள் அறிகிறோம் என்பதையும் எங்கள் உள்ளங்களில் நினைவூட்டியருளும். மாசற்றத்தன்மையின் ஆவியையும், எங்களால் செய்ய இயலாதவற்றை உமது வல்லமையால் செய்யமுடியும் என்ற நம்பிக்கையையும் எங்கள் மனங்களில் பொழிந்தருளும். அற்புதங்கள் நிறைந்த உமது படைப்புகளை நாங்கள் ஏறிட்டுப் பார்க்கும்போது, அளவற்ற ஆச்சரிய உணர்வோடு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கைக் கொண்ட உமது குழந்தைகளாக அமைதியில் வாழ்ந்திட அருள் செய்வீராக! ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

புதன், டிசம்பர் 4

முன்மொழி: ஏழைகளைக் காப்பவரே, எழுந்து வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 72:4)
“எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக”.

மன்றாட்டு:
எளியோரை ஆதரிக்கின்ற ஆண்டவரே, வாரும்! தாராளமனம் கொண்ட இதயத்தை எம்முள்ளே உருவாக்கும். பசி-தாகம் கொண்டோர், ஆடையின்றி இருப்போர், தனிமையில் தவித்திடுவோர் மற்றும் சிறைபட்டோர் – இவர்களின்அழுகுரலில் உமது பிரசன்னத்தை நாங்கள் கண்டுணரும் வண்ணம் எங்கள் கண்களைத் திறந்தருளும். உதவி நாடி நிற்கின்ற மிகச் சிறியோராகிய எங்கள் சகோதர – சகோதரிகளுக்கு நாங்கள் செய்வதெல்லாம் உம் திருமகன் இயேசுவுக்கே செய்கிறோம் என்பதை எங்களுக்கு நினைவூட்டியருளும். ஏழை – எளியோரின் கூக்குரலுக்கு செவிமடுத்து அவர்களுக்கு உதவி செய்வதற்கான நற்பண்பை எங்கள் உள்ளங்களில் விதைத்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

வியாழன், டிசம்பர் 5

முன்மொழி: புதுப்பிக்கும் மழையைப் போல, ஆண்டவரே, வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 72:6)
“அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக; நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக”.

மன்றாட்டு:
புத்துயிர் தந்து புதுப்பிக்கின்ற மழையைப் போல, ஆண்டவரே, எழுந்து வாரும். எங்கள் உள்ளங்கள் உம்மேல் தாகம் கொண்டுள்ளன. ஆறுதல் தருகின்ற உமது உடனிருப்புக்காக எங்கள் இதயங்கள் ஏங்குகின்றன. வசந்தத்தின் உயிர்துடிப்புடன் கூடிய உமது படைப்பின் மேன்மையைக் காண எங்கள் கண்கள் தவிக்கின்றன. வானிலிருந்து பொழியும் மழை நிலத்தை புதுப்பிப்பது போல, எங்கள் வாழ்வை உமது அருள் மழையால் நனைத்தருளும் உமது பராமரிப்பை பொழிந்து, எம் உள்ளத்தின் வறட்சியை நீக்கி, உமது அமைதியால் எம் மனங்களை குளிர்வித்தருளும். விண்ணக வரங்களால் புத்துயிர் பெற்று, உமது அன்பினால் இந்த உலகை நாங்கள் நிரப்பிட வரம் தாரும். ஆமென்

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

வெள்ளி, டிசம்பர் 6

முன்மொழி: வரவேற்று ஏற்றுக்கொள்ளூம் ஆண்டவரே, வாரும்!

மறைநூல் (உரோமையர் 15:7)
“ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்”.

மன்றாட்டு:
வரவேற்று எம்மை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே, வாரும். மெய்யுறுதியிலிருந்து விலகி, மனஉளைச்சலை ஏற்படுத்துகின்ற அறிமுகமற்ற மனிதர்களை, கருத்துகளை, கோட்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு எங்கள் இதயக் கதவுகளைத் திறந்தருள்வீர். உமது தெய்வீக உடனிருப்பைக் கண்டுணரும் வண்ணம் எங்கள் இதயங்களையும், எங்கள் மனங்களையும், எங்கள் ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் திறந்தருளும். பிறரை வரவேற்று ஏற்றுக்கொள்ளூம்போது, நாங்கள் இயேசுவையே வரவேற்கிறோம் என்பதை எமக்கு நினைவூட்டியருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

சனி, டிசம்பர் 7

முன்மொழி: பாலைநிலத்தில் முழங்கும் குரலொலியே, வாரும்!

மறைநூல் (மத்தேயு 3:3)
“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்”.

மன்றாட்டு:
பாலைநிலத்தில் முழங்கும் குரலொலியே, வாரும். பழகிப் போன எங்கள் வாழ்க்கை முறைகளிலிருந்து, விறுவிறுப்பான எங்கள் நகரச்சூழலிலிருந்து, பேரங்காடிகளின் பரபரப்பிலிருந்து நாங்கள் விலகி நிற்கச் செய்வீராக. கவனத்தைச் சிதறடிக்கின்ற காட்சிகள் கூச்சல்களிலிருந்து எங்களை வெளியேற்றி, மகிழ்ச்சியும் மனஅமைதியும் நிலவும் தனியிடத்திற்கு எம்மை நடத்திச் செல்வீராக. வசதிவாய்ப்புகள் நிறைந்த எங்கள் வாழ்க்கை முறைகளைத் துறந்து, இதுவரை நாங்கள் நடந்திராத புதிய பாதைகளில் நடந்து செல்வதற்கான துணிவைத் தருவீராக. அமைதியும், நீதியும் கோலோச்சுகின்ற புதியதொரு உலகினை கண்டறிந்து பயணிக்கவும் அதற்காகவே எங்கள் வாழ்வினை அர்ப்பணிக்கவும் உமது திருவருளால் எம்மை நிரப்பியருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஞாயிறு, டிசம்பர் 8

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு – மன்றாட்டு

அமைதியின் ஆண்டவரே, வருவீர்! தாகம் கொண்டிருக்கும் இந்த உலகின் மீது நீர் பொழிகின்ற அன்பெனும் மழையை பெறுவதற்கும், எங்களிலிருந்து வேறுபட்டிருப்போருக்கு செவிமடுத்து, அவர்களை புரிந்து கொள்வதற்கும், போர்களினால் சிதைந்து அவதியுறுகின்ற இந்த உலகிற்கென நீர் தரவிருக்கின்ற அமைதியை நாடிச் செல்வதற்கும், எங்கள் இதயங்களைத் திறந்தருளும். வசதிகள் மிகுந்த வாழ்க்கைச் சூழலிலிருந்து விலகிநின்று சில மணித்துளிகளை உம்மோடு அமைதியில் கழித்திடவும், அதன் விளைவாக உமது அழைப்பினை நாங்கள் அறிந்திடவும் எங்களுக்கு மனஉறுதியைத் தாரும். நீர் எங்களை நடத்திச் செல்லுகின்ற வழியை பின்பற்றுவதற்கான ஞானத்தையும், துணிவையும், வலிமையையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

திங்கள், டிசம்பர் 9

முன்மொழி: அச்சம் நீக்கும் ஆண்டவரே, வாரும்!

மறைநூல் (எசாயா 35:4)
“உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்”.

மன்றாட்டு:
அச்சம் நீக்கும் ஆண்டவரே, வாரும். ஆபத்து, இழப்பு, வெறுமை – இவற்றினால் எம் மனதில் எழுகின்ற பயத்தை அகற்றி, ஆறுதல் தரும் உமது உறுதிமொழிகளால் எம்மை நிரப்பும். நிராகரிப்பு, தகுதியின்மை, தனிமை – இவற்றின் விளைவான அச்சத்தை அகற்றி, நிபந்தனையற்ற உமது அன்பை எம்மிலே பொழிந்தருளும். உமது உடனிருப்பு எம்மைவிட்டு விலகிடாதவாறு எங்கள் வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் நீர் எம்மோடு கூடவே நடந்து வருகிறீர் என்பதை எமக்கு நினைவூட்டுவீராக. உமது உறுதிமொழிகளின் மகிழ்ச்சியாலும், அதன் விளைவான அமைதியாலும் எம் இதயங்களை நிரப்பியருளும். உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற அன்பையும், அமைதியையும் மற்றவர்களோடு பகிர்ந்திடுவோமாக! ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

செவ்வாய், டிசம்பர் 10

முன்மொழி: பாலைநிலத்திற்கு புத்துயிர் ஊட்டுபவரே, வாரும்!

மறைநூல் (எசாயா 35:1)
“பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்”.

மன்றாட்டு:
பாலைநிலத்திற்கு புத்துயிர் ஊட்டுபவரே, வாரும். அன்பு மறைந்து, அக்கறையும், பராமரிப்பும் இல்லாமல் இந்த உலகில் வறட்சியுற்றிருக்கின்ற எல்லாவற்றிற்கும் புத்துயிரூட்டி புதுப்பித்தருளும். நிபந்தனையற்ற உமது அன்பையும், புதிதாக மாற்றித் தருகின்ற உமது மகிழ்ச்சியையும் இந்த உலகெங்கும் வழிந்தோடச் செய்தருளும். உற்சாகமூட்டும் வார்த்தைகளின் வலிமையையும், மென்மையான தொடுதலின் மனநெகிழ்வையும், அயலாருக்கு கவனமுடன் செவிமடுக்கின்ற பண்பையும், ஆறுதல் அளிக்கின்ற மனபாங்கையும் எம்முள்ளே விதைத்தருளும். இதன் பயனாக, எம்மைச் சுற்றியிருக்கின்ற வறட்சியான உள்ளங்களில் உமது அன்பை நாங்கள் விதைத்திட வரம் தாரும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

புதன், டிசம்பர் 11

முன்மொழி: எங்கள் சுமைகளை அகற்றுபவரே, வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 146:8)
“ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்-பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்”.

மன்றாட்டு:
எங்கள் சுமைகளை அகற்றுபவரே, வாரும். நாங்கள் சுமந்து கொண்டிருக்கின்ற பாரமான சுமைகள் என்னவென்று கண்டுணரவும், அவற்றை எம்மிடமிருந்து அகற்றுவதற்காக உமது உதவியை நாடவும் வரம் தாரும். கவலைகளாலும், அச்சஉணர்வினாலும், குடும்பச் சூழல் மற்றும் பணித்தள பிரச்சினைகளாலும் உண்டாகின்ற அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்போரின் உள்மன பாரத்தை அகற்றிடுவீராக. அடுத்திருக்கின்ற எங்கள் சகோதர – சகோதரிகளை வருத்துகின்ற துயரச் சுமைகளை நீக்குவதற்கான வழிகளை நாங்கள் கண்டறிந்திடவும், அதனால் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை துய்த்துணரவும் எங்கள் அகக்கண்களைத் திறந்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

வியாழன், டிசம்பர் 12

முன்மொழி: பொறுமை காப்போரை உயர்த்துபவரே, வாரும்!

மறைநூல் (யாக்கோபு 5:8)
“நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்-படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது”.

மன்றாட்டு:
பொறுமை காப்போரை உயர்த்துபவரே, வாரும். பொறுமையுடனும், எதிர்நோக்குடனும் வாழ எங்களுக்குக் கற்றுத் தாரும். அமைதியான சிந்தனையின் பயனாக வெளிப்படுகின்ற இயல்பான விளைவுக்காக காத்திருக்க விருப்பமின்றி, உடனடி தீர்வுகளையே எப்போதும் நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம். பிரச்சினைக்களுக்கான தீர்வுகள் துரிதமாகக் கிடைக்காத போதும், முறிந்திட்ட உறவுகள் கணப்பொழுதில் சீர்செய்யப்படாத போதும், எங்கள் செயல்திட்டங்கள் நாங்கள் நினைத்தவாறு முன்னோக்கிச் செல்லாமல் பின்தங்கிடும் நிலையிலும், பொறுமையை கடைபிடிக்க மனமின்றி நம்பிக்கை இழக்கிறோம். நிரந்தர தீர்வுக்கான தொலைநோக்குப் பார்வையையும், மகிழ்ச்சியான எதிர்நோக்குடன் காத்திருக்கின்ற பொறுமையையும் நாங்கள் பெற்றிட உதவி செய்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

வெள்ளி, டிசம்பர் 13

முன்மொழி: கருணையோடு எம்மை குணப்படுத்துபவரே, வாரும்!

மறைநூல் (மத்தேயு 11:5)
“பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்”.

மன்றாட்டு:
கருணையோடு எம்மை குணப்படுத்துபவரே, வாரும். காயப்பட்டிருக்கின்ற இந்த உலகினை குணப்படுத்தும். காயப்பட்டிருந்த உடல்களுக்கும், உள்ளங்களுக்கும் நலமருளிய இறைமகன் இயேசுவாக தோன்றிய நீர், கிறிஸ்துவின் திருவுடலாக இவ்வுலகில் நாங்கள் வாழ்ந்திட அழைப்பு விடுத்தீர். உமது உடனிருப்பை காணாத கண்களுக்கு பார்வை தரவும், உமது அன்பின் அழைப்பைக் கேளாத காதுகளுக்கு எதிர்நோக்கின் வார்த்தைகளை எடுத்துச் சொல்லவும், பாதை தேடி தவிக்கின்ற பாதங்களுக்கு நல்வழி காட்டவும் எங்களுக்கு துணை செய்வீராக. இந்த உலகத்தில் குணமளிக்கின்ற உமது கருவிகளாக நாங்கள் செயல்பட உதவி செய்தருளும், ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

சனி, டிசம்பர் 14

முன்மொழி: எம்மைப் படைத்து பராமரிப்பவரே, வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 146:5,6)
“யாக்கோபின் இறைவனை தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்”.

மன்றாட்டு:
எம்மைப் படைத்து பராமரிப்பவரே, வாரும். இறைவா, விண்ணையும், மண்ணையும், காண்பவை, காணாதவை அனைத்தையும் படைத்தவர் நீரே. ஆயினும், எங்கள் ஒவ்வொருவரின் அருகிலும் நீர் இருக்கின்றீர். இவ்வுலகிலுள்ள படைப்புகள் எல்லாமே தங்கள் உயிர்மூச்சுக்காக உம்மையே சார்ந்துள்ளன. ஆயினும், பெயர் சொல்லி அழைக்கின்ற வகையில் மிக நெருக்கமாக எங்கள் ஒவ்வொருவரையும் அக்கறையோடு அறிந்து அன்பு செய்கின்றீர். நாங்கள் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு உமது பேரன்பின் பராமரிப்பு எங்களை வழிநடத்துகின்றது. ஆகவே, எங்கள் இதயம் நிறைந்த நன்றிபெருக்கோடும், மகிழ்வோடும் உம்மை போற்றுகிறோம். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஞாயிறு, டிசம்பர் 15

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு – மன்றாட்டு

எங்கள் மகிழ்ச்சியின் கடவுளே, வாரும்! இறைவா, இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே என்பதையும், உமது மேலான அரவணைப்பில் இன்றளவும் எம்மை நீரே பராமரித்து வருகிறீர் என்பதையும் நன்றியோடு நினைவுகூருகிறோம். எந்நாளும் எம்மோடிருக்கின்ற உமது தெய்வீக பிரசன்னத்தில் நம்பிக்கைக் கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த எதிர்நோக்குடனும், பொறுமையுடனும் நாங்கள் வாழ்ந்திடச் செய்வீராக. குணமளிக்கும் உமது வல்லமை எங்கள் வாழ்வில் செயலாற்றுவதை கண்டுணர எங்கள் கண்களைத் திறந்தருளும். இதன் பயனாக, கருணையும் கனிவும் கலந்த அக்கறை உணர்வுடன் இந்த உலகினை நாங்கள் அணுகிச் செல்ல வரம் தாரும். உம்முடைய அன்பாலும், மகிழ்வினாலும் இந்த உலகத்தை மாற்றியமைப்பதற்கான ஞானத்தையும், துணிவையும், வல்லமையையும் எம்முள் பொழிந்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

திங்கள், டிசம்பர் 16

முன்மொழி: இஸ்ராயேலின் ஆயரே, வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 80:1) “இஸ்ரயேலின் ஆயரே, யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே, செவிசாயும்!”.

மன்றாட்டு:
இஸ்ராயேலின் ஆயரே, வாரும். இறைவா, நீரே எங்கள் ஆயராக இருந்து எம்மை வழிநடத்துவீராக. பரபரப்பும், கலவரமும், குழப்பமும் நிறைந்த இவ்வேளையில் தெளிந்த நீர்நிலைகளின் அருகிலே எம்மை நடத்திச் செல்வீராக. நெறி தவறி, பாதை மாறிச் செல்கின்ற எங்களை உமது மேலான அரவணைப்பின் பாதுகாப்பிற்கு கூட்டிச் சேர்த்தருளும். நாங்கள் நடந்து செல்கின்ற பாதையில் உமது அருள்நலமும், பேரன்பும் எம்மை புடைசூழ்ந்து வருவதாக. இதன் பயனாக, சலனமற்று இறுகியிருக்கின்ற எங்கள் இதயங்களில் உமது அன்பையும், அமைதியையும் நாங்கள் கண்டுணர்வோமாக. ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

செவ்வாய், டிசம்பர் 17

முன்மொழி: இறைவனின் ஞானமே, வாரும்!

மறைநூல் (மத்தேயு 1:20)
“யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்..." என்றார்”.

மன்றாட்டு:
இறைவனின் ஞானமே, வாரும். படைப்பின் தொடக்கத்திலிருந்தே நீர் உடனிருக்கின்றீர். அன்று கடவுளின் வாய்மொழி கட்டளையாக இருந்து அனைத்தையும் படைத்த நீர், இன்றும் எங்கள் இதயங்களில் பேசிகொண்டிருக்கின்றீர். மறைநூல், மன்றாட்டு, சகமனிதர்கள், தேவதூதர்கள், எமது சிந்தனை, கனவு – இப்படி பல வழிகளில் எம்மை வந்தடைகின்ற உமது குரலை நாங்கள் கண்டுணரச் செய்தருளும். எம்முள்ளே செயலாற்றுகின்ற உமது குரல் என்றும் உயிர்துடிப்போடு எம்மை வழிநடத்துவதாக. ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

புதன், டிசம்பர் 18

முன்மொழி: தொன்மையுடைய இஸ்ராயேலின் ஆண்டவரே, வாரும்!

மறைநூல் (உரோமையர் 1:2,3)
“நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்”.

மன்றாட்டு:
தொன்மையுடைய இஸ்ராயேலின் ஆண்டவரே, வாரும் நெடுநாள்களுக்கு முன்னமே நீர் உமது மக்களிடம் வந்தீர். புதரிலே பற்றி எரியும் நெருப்பாகவும், பாலைநிலத்தில் வழிநடத்திச் செல்லும் மேகமாகவும் மோசேவுக்கு நீர் காட்சி தந்தீர். தாவீதின் குலத்திலே நீர் வரவிருக்கிறீர் என்றுரைத்த இறைவாக்கினரின் எதிர்நோக்கை நிறைவேற்றினீர். உள்ளம் சோர்வுற்று, நம்பிக்கையிழந்து நாங்கள் வாடும்போது, எங்கள் கடந்த கால வாழ்வைத் திரும்பிப் பார்த்து, அதிலே நீர் ஆற்றிய அருஞ்செயல்களை எண்ணி திடம் பெறுவோமாக! எதிர்வரும் நாள்கள் நலிவடைந்து தோன்றும்போது எங்கள் கடந்தகால வாழ்விலிருந்து வலுப்பெற்று “எம்மை நீர் என்றும் அன்பு செய்கிறீர்” என்ற உமது வாக்குறுதியில் நம்பிக்கைக் கொள்வோமாக. ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

வியாழன், டிசம்பர் 19

முன்மொழி: ஈசாய் மரத்தின் இளந்தளிரே, வாரும்!

மறைநூல் (எசாயா 7:13, 14)
“தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்;.... ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்”.

மன்றாட்டு:
ஈசாய் மரத்தின் இளந்தளிரே, வாரும். இஸ்ராயேலின் அரசராக ஆவதற்கு எவ்வகையிலும் வாய்ப்பிலாத ஈசாயின் இளையமகனை அன்று நீர் அரசராகத் திருப்பொழிவு செய்தீர். அதே போல, உமது திருமகனைக் கருவிலே தாங்குவதற்கு அதுவரை அறியப்படாதிருந்த ஏழையும், கன்னியுமான ஒரு இளம்பெண்ணை தேர்ந்தெடுத்து உமது மக்களை மீண்டும் வியப்படையச் செய்தீர். சட்டத்தின் வழிநின்று ஆட்சி செய்கின்ற வலிமைமிகு அரசராக இல்லாமல், தன் உயிரையே தந்து வழிநடத்துகின்ற ஊழியனாக உம் மகன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினீர். எதிர்பாராத வழிகளில் மக்களிடையே செயலாற்றி, உமது திருவுளத்தை நீர் எவ்வாறு நிறைவேற்றுகிறீர் என்பதை நாங்கள் காணச் செய்தருளும். உமது திட்டத்தில் எங்கள் பங்கு என்ன என்பதை எங்களுக்கு வெளிப்படுத்தியருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

வெள்ளி, டிசம்பர் 20

முன்மொழி: தாவீதின் திறவுகோலே, வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 80:17)
“உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!”.

மன்றாட்டு:
தாவீதின் திறவுகோலே, வாரும். இறைவனின் வலப்புறம் வீற்றிருப்பவர் நீரே. விண்வீட்டின் கதவுகளைத் திறந்திட்டவரும் நீரே. உமது மன்னிப்பை எங்களுக்குத் தந்து, எங்கள் பாவங்களிலிருந்தும், தீய நாட்டங்களிலிருந்தும், மற்றவர் பிழைகளைப் பொறுத்து மன்னிக்காத குணத்திலிருந்தும் விடுவித்து எங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்திடுவீராக! மனம்வருந்தி திருந்திட முயன்றாலும் மாற்ற முடியாதிருக்கின்ற எங்கள் கடந்த கால பாவ வாழ்க்கையின் கதவுகளை அடைத்துத் தாழிட்டு வைத்தருளும். உமது விண்ணக வீட்டிற்கு நடந்து வருகின்ற பாதையிலே எங்களை வழிநடத்திக் காத்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

சனி, டிசம்பர் 21

முன்மொழி: ஒளிவீசும் விடியலின் இளங்கதிரே, வாரும்!

மறைநூல் (திருப்பாடல் 80:3)
“கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!”.

மன்றாட்டு:
ஒளிவீசும் விடியலின் இளங்கதிரே, வாரும். இருள் சூழ்ந்திருக்கின்ற இவ்வேளையில், ஆண்டவரே, உமது பேரொளியின் வருகையை எங்கள் இதயம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. இன்னல் சூழும் இரவு நீண்டு செல்கிறது. கவலைகள் எம்மை அழுத்துகின்றன; தனிமை எம்மை வருத்துகின்றது; அச்ச உணர்வு அதிகரிக்கின்றது. கதிரவன் எழும் காலைநேரம் வரையில் இருளை அகற்றி ஒளியேற்றிடும் விடியலின் விளக்காக உமது அன்பின் கரங்களால் எம்மை அணைத்துக் கொள்வீராக. உமது மீட்பின் வாக்குறுதியிலும், மன்னிப்பின் மாண்பிலும் ஒவ்வொரு விடியலையும் நாங்கள் எதிர்கொள்வோமாக. இன்றைய நாள் என்னும் உமதருள் கொடையை நாங்கள் ஏற்கின்ற வேளையில் உமது திருமுக ஒளி எங்கள் மீது வீசச் செய்தருளும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஞாயிறு, டிசம்பர் 22

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு – மன்றாட்டு

முன்மொழி: அனைத்து நாடுகளின் அரசரே, வாரும்!

அன்பின் கடவுளே, வருவீர். திருவருகைக் காலத்தின் இறுதி ஞாயிறான இந்நாளில் உலகெங்கும் உள்ள படைப்புகளின் ஆர்ப்பரிப்போடு எங்கள் உள்ளங்களையும், உணர்வுகளையும் ஒன்றிணைக்கின்றோம். மீட்புக் குறித்த உமது வாக்குறுதி நிறைவேறியதால் உம்முடையத் திருமகனின் பிறப்பை மகிழ்ச்சியோடு நாங்கள் கொண்டாடுகிறோம். இவ்வேளையில், எங்கள் தியானசிந்தனைகளும், மன்றாட்டுகளும், சொல்லும், செயலும் எல்லாம் வல்ல கடவுளே, உமக்கு மகிழ்ச்சியும், இவ்வுலகிற்கு உமது அன்பையும் தருவனவாக. வெள்ளமென பெருகிடும் உமது அன்பு, உலகெங்கும் வாழ்வோர் அனைவரையும் ஒன்றிணைப்பதாக! இதனால், அன்பென்னும் இறையாற்றல் இவ்வுலகம் முழுவதையும் ஆட்கொள்வதாக! ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

திங்கள், டிசம்பர் 23

முன்மொழி: இம்மானுவேலே, எழுந்து வாரும்!

மறைநூல் (தீத்து 3:4-6)
“நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு... கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்”.

மன்றாட்டு:
இம்மானுவேலே, எழுந்து வாரும். உமது உடனிப்பை இந்த உலகிற்கு அளித்திட திருவுளம் கொண்டு மனித உருவெடுத்த உமது பிறப்பினைக் கொண்டாட நாங்கள் எங்களையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம். உமது தெய்வீகப் பண்புகளை இவ்வுலகிற்கு நீர் வெளிப்படுத்துகின்றீர். உமது அருள்நலத்தின் வழியாக, பரிவிரக்கத்தின் வழியாக, உமது மன்னிப்பின் வழியாக, அமைதிநெறிகளின் வழியாக, அனைத்தையும் எமக்காக அர்ப்பணிக்கின்ற பேரன்பின் வழியாக கிறிஸ்தவ வாழ்வின் பாதையை எமக்கு காட்டுகின்றீர். உம்முடைய அடிசுவட்டை பின்பற்றி, உமது உடனிருப்பை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்ற சாட்சிகளாக எந்நாளும் நாங்கள் வாழ்ந்திட வரம் தாரும். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

செவ்வாய், டிசம்பர் 24

முன்மொழி: கன்னி மரியின் மைந்தனே, வாரும்!

மறைநூல் (லூக்கா 2:7)
“அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்”.

மன்றாட்டு:
கன்னி மரியின் மைந்தனே, வாரும். அன்று கன்னி மரியின் கரங்களில் மழலையாக தவழ்ந்தது போல இன்று எம் உள்ளங்களில் எழுந்து வாரும். நீர் எம்மீது காட்டுகின்ற பேரன்பை எங்கள் இதயங்கள் ஏற்றுக்கொள்ளுதல் எளிதல்ல. நீர் எம்முடன் தோழமை கொண்டிருக்கவும், நாங்கள் உம்மை புரிந்துணர்ந்து அன்பு செய்யவும் விரும்பினீர். மகிழ்ச்சி, அன்பு, கோபம், அச்சம் – இவற்றை உணரவும், பசி, தாகம், சுகம், வேதனை – இவற்றை அனுபவிக்கவும், அவமானம், மறுதலிப்பு, வன்முறையோடு கூடிய மரணம் – இவற்றை எங்களுக்காக ஏற்றுக்கொள்ளவும், எம்மீது கொண்ட அன்பினால் எம்மில் ஒருவரானீர். நீர் எங்களுக்குத் தந்த இந்த மாபெரும் அருள்கொடைக்காக வானவர் அணிகளோடு சேர்ந்து உமது திருப்பெயரை போற்றிப் புகழ்கிறோம். ஆமென்.

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு

புதன், டிசம்பர் 25

தூளியில் ஆடவந்திட்ட விண்ணக வேந்தனுக்கு
துதியினால் வரவேற்பைச் செலுத்திடுவோம்
தூயவராம் மண்ணுலக மீட்பருக்கு
தூய உள்ளத்தோடு வரவேற்பளித்திடுவோம்.
வாழ்வின் மையம் நீ ஆனதால் எம் வாழ்வு இனிதானதே.....

merry christmas

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!!!

மேலே 
செல்ல அன்பின்மடல்-முகப்பு