திருவருகைக்கால மெழுகுவத்திகள்

Image


திருவருகைக்கால மெழுகுவத்திகளை ஏற்றும் வழிமுறை

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று திருவருகை காலத்திற்குள் காலடி வைக்கிறோம். இக்காலம், இறை மகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம். விழித்திருந்து நம் மீட்பரை சந்திக்க நம்மை அழைக்கின்ற காலம். இருளின் பிடியில் இருந்தும், அடிமையின் பிடியில் இருந்தும், அழிவில் இருந்தும், துன்பத்தல் இருந்தும் காத்துக்கொள்ள மானிட மகனை சந்திப்பதற்காக அவரை நம் உள்ளத்தில் ஏற்று அவரையே அணிந்து கொள்ள அழைக்கும் அன்பின் காலம். இஸ்ராயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக காத்திருந்ததுபோல நாமும் காத்திருப்போம். விளக்குகளுடன் அன்று இயேசு மொழிந்த பத்து தோழியர் உவமையில் அக்கன்னியர் காத்திருந்தனர். அவர்களை போல நாமும் விளக்குகள் ஏற்றி மணமகனின் வருகைக்காக நம்மையே தயார் செய்வோம்.

முதல் வாரம்: எதிர்நோக்கு

week1


இது தான் எதிர்நோக்கின் மெழுகுவத்தி. இது மீட்பரின் வருகைக்காக காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களான - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை குறிக்கின்றது.

"கவனமாய் இருங்கள், விழிப்பாய் இருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வருமென உங்களுக்கு தெரியாது" - மாற்கு 13:33,

ஆண்டவர் நம்மை விழிப்புடன் காத்திருக்கும்படி கேட்கின்றார். ஆனால் நாமோ உலக கவலைகளிலும், உலக கவர்ச்சிகளிலும் நம் மனங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறோம். இனியாவது "ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கின்றேன்" என்று கூறி அவரின் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்துவோம்.


செபம்:

இம்மானுவேலே இயேசு கிறிஸ்துவே! எல்லா நாடுகளும் எதிர்பார்க்கும் ஆண்டவரே! அனைத்து மக்களின் மீட்பரே! வந்து எங்களிடையே தங்கும்.

இரண்டாம் வாரம்: அமைதி

week2


இதுதான் அமைதியின் மெழுகுவத்தி. மீட்பரின் வருகை, வரும் காலம்,அவரின் இயல்புகள் போன்ற அனைத்து செய்திகளையும் தந்த இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, தானியேல் போன்றோரை குறிக்கின்றது.

"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" - மத்தேயு: 3: 1

இறைவாக்கினர்கள் அனைவரும் மீட்பரின் வருகைக்காக நாம் எவ்வகை தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்துள்ளனர். நாம் அனைத்தையும் அறிந்திருந்தும் நம் வலுவின்மையாலும், விசுவாச குறைவாலும் மீண்டும் மீண்டும் ஆண்டவரை விட்டு விலகி செல்கிறோம். இனியாவது அவரில் நம்பிக்கை கொண்டு அவரை நாடி தேடுவோம்.

செபம்:

ஓ இயேசு கிறிஸ்துவே அனைத்து உலகங்களின் அரசரே! எல்லா இதயங்களின் மகிழ்ச்சியே! விரைவில் வந்து உம் மக்களை மீட்டருளும்.

மூன்றாம் வாரம்: மகிழ்ச்சி

week 3


இது தான் மகிழ்ச்சியின் மெழுகுவத்தி. இது மீட்பரின் முன்னோடியான புனித திருமுழுக்கு யோவானை குறிக்கின்றது.

"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாகுங்கள்; அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள், பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பபடும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பை காண்பர்" - லூக்கா: 3: 4-6

நாம் மீட்பின் காலத்தை நெறுங்கிவிட்டோம். திருமகன் கிறிஸ்துவை அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றோமா? அவர் வரும்போது அவரது வலப்பக்கம் நிற்கவும், விண்ணரசை அடையவும் ஏற்புடையவர்களாவோம்.

செபம்:

உலகத்தின் ஒளியே உண்மையின் சுடரே! இயேசு கிறிஸ்துவே! வந்து எம்மை தேற்றும்.

நான்காம் வாரம்: அன்பு

week4


இது அன்பின் மெழுகுவர்த்தி. அன்னை மரியாவையும அவர் கணவர் புனித யோசேப்பையும் குறிக்கின்றது.

அவர் பெரியவராய் இருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவா -லூக்கா 1:32-33

மீட்பரை சந்திக்க அன்னை மரியாவும் புனித யோசேப்பும் எவ்வாறு ஆயத்தமாய் இருந்தனரோ அவர்களைப்போல் நம்மை மீட்க வந்த பாலகனை வரவேற்க நம்மை தயார்படுத்த இதுவே வாய்ப்பு. அன்னையின் எதிர்நோக்கையும், புனித யோசேப்பின் நேர்மைத்தனத்தையும் கொண்டு வாழ முயல்வோம்.

செபம்:

உலகை கடந்த ஞானமே! உண்மை கடவுளின் வார்த்தையே! இயேசுகிறிஸ்துவே! வந்து மீட்பின் பாதையை எமக்கு காட்டும்.