சென்னையின் முதல் கிறிஸ்துவ போதகர்
தந்தை எப்ரேம் தெ நெவேர்

அருள் சகோதரி ஜெனி - பனித அன்னாள் சபை -திருச்சி

திருத்தூதர் புனித தோமாவுக்குப் பின் பலர் சென்னையில் கிறிஸ்தவத்தைப் பரப்பியுள்ளனர். எனினும் நினைவில் நிற்கக்கூடியவர் தந்தை எப்ரேம்தெநெவேர். இவர் 1603ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். செல்வச் செழிப்புடன் பிரபுக்களின் குடும்பத்தில்பிறந்த இவர், புனிதபிரான்சிஸ் அசிசி வழியில் தானும் வாழ ஆசைக்கொண்டார்.

பிரான்சிஸ்கன் கப்புச்சின்சபைத் துறவிகளின் எளிய வாழ்வும், ஏழைகளுக்கான வாழ்வும் இவரைப் பெரிதும் ஈர்க்கவே தன்னையும் கப்புச்சின் துறவறச்சபையில் அர்ப்பணித்தார். குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டபின், இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க மறைப் பணியாளராக முதலில் மத்தியகிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். 1636 முதல் 1640 வரை நான்கு ஆண்டுகள் லிபியா, சிரியா, துருக்கி, பெர்சியா நாடுகளில் பல்வேறு மறைப்பணித் தளங்களில் பணியாற்றினார். அரபு மற்றும் பெர்சியன் மொழிகளில் இவர் கொண்ட புலமையால், புதிய மறைபணித் தளங்களை நிறுவும் பொறுப்பினை இவரிடம் வழங்கினர். மியான்மரின் பெகு நகரில் புதிய மறைப்பணித்தளம் நிறுவும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் உள்ள சூரத் நகரை 1640இல் வந்தடைந்தார். 1639 ஆம் ஆண்டு சூரத் நகரில் இந்தியாவின் முதல் கப்புச்சின் மறைப்பணித்தளத்தை நிறுவிய மற்றொரு பிரெஞ்சு கப்புச்சின் குரு ஜெனோ தெ பியாஜேவுடன் சில மாதங்கள் தங்கி ஆன்மிகப்பணியாற்றினார்.

கடல்வழியாக பெகுவிற்குச் செல்ல எப்ரேம் தெ நெவேர் சென்னை வந்தபோது கிழக்கிந்திய ஆங்கிலேய வாணிபக்கழகத்தில் பணியாற்றிய போர்த்துக்கீசியக் கத்தோலிக்கர்களுக்கு ஆன்மிகப் பணியாற்ற சென்னையிலே தங்குமாறு கிறிஸ்தவர்களாலும், வாணிபக் கழகத்தின் தலைவர்களாலும் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டார். எனவே சென்னையின் முதல் கிறிஸ்தவப் மக்களின் ஆன்மிகத் தாகத்தையும், தேவையையும் உணர்ந்து இறைத்திட்டத்தை அறிந்து 1642 சூலை8ஆம் நாள் தமிழ்மண்ணில் சென்னைமாநகரில் முதல் கிறிஸ்தவ மறைப்பணித் தளத்திற்கு அடித்தளமிட்டார். இதன் மூலம் சென்னையின் முதல் கிறிஸ்தவப்போதகர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த முடிவை பிரான்சிலுள்ள தனது சபையின் தலைவருக்கும், உரோமையிலுள்ள மறைப்பரப்புப் பேராயத்தலைமைக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்றார். இந்தக் கப்புச்சின் சென்னை மறைப் பணித் தளத்தை திருத்தந்தை எட்டாம் அர்பன் மயிலை பத்ரவாதோ மறை மாவட்டத்திலிருந்து விடுவித்து மறைப்பரப்புப் பேராயத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி கொண்ட மறைப்பணித்தளமாக உயர்த்தி புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டு, அதன் முதல் திருப்பீடக் கண்காணிப்பாளராக அருட்தந்தை எப்ரேம் தெநேவேரை 1642இல்நியமித்தார். 1639இல் ஆங்கிலேயரால் நிறுவப்பட்ட சென்னையில் முதல் கிறிஸ்தவ மறைப் பணித்தளம் நிறுவியவர். புனிதஜார்ஜ் கோட்டைக்குள் சென்னையின் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை புனித அந்திரேயாவுக்கு 1642இல் அமைத்தவர்.

ஆங்கிலேயரின் குழந்தைகள் வளர்ச்சிக்காக இந்தியாவின் முதல் ஆங்கிலப்பள்ளியை 1642இல் நிறுவியவர். சென்னை மறைப்பணித்தளத்தின் முதல் கண்காணிப்பாளர். சென்னை மாநகரில் புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கி தமிழ்மக்களுக்காக ஆர்மேனியன் தெருவில் 1658இல் புனித மரியன்னையின் பெயரால் (இன்று புனித அந்தோணியார் திருத்தலம்) ஆலயம் அமைத்தவர். இன்று புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனிதமேரி ஆங்கலிக்கன்ஆலயம் 1680இல் அமைக்கப்படும்வரை, ஆங்கலிக்கன் மற்றும் ஆர்மீனியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாடுகளை நடத்த அதே கோட்டைக்குள் அமைந்த புனித அந்திரேயா கத்தோலிக்க ஆலயத்தை தந்தை எப்ரேம் தெ நேவேர் வழங்கி சென்னையில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் தந்தையாக திகழ்ந்தார்.

கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் பெருவிழா நேரங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் எண்ணிக்கையில் கத்தோலிக்க ஆலயத்தை நாடினர். அவர்களோடு எப்போதும் எப்ரேம் இணக்கமான நல்லுறவை வளர்த்தார். சென்னையில் மறைப்பணி ஆற்றக்கூடாது என இரண்டு ஆண்டுகள் போர்த்துக்கீசியர்களால் கோவாவில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளை ஏற்று, அச்சுறுத்தப்பட்டார். கோல்கொண்டா முகமதிய அரசன் உதவியால் மீண்டும் சென்னையில் தன் இறுதி மூச்சு வரை அவர் ஆற்றிய இறைபணிகளால் அனைத்துதரப்பட்ட மக்களாலும் மிகவும் அன்பு செய்யப்பட்டார்.

1632 இல் கப்புச்சின்சபையினர் இந்தியாவில் முதலில் கால்பதித்து மறைப்பணி ஆற்றிய இடம் புதுச்சேரி. ஆனால் சில காரணங்களால் அப்பணி தடைபட்டது. 1673இல் பிரெஞ்சுக்காரர்கள் அழைப்பை ஏற்று எப்ரேம் சில கப்புச்சின் மறைப்போதகர்களை அனுப்பி 1674இல் புதுச்சேரியில் நிலையான மறைப்பணித்தளத்தை நிறுவிட பெரிதும் உதவினார். சென்னையின் புனிதர் என்று மக்களால் பெரிதும் போற்றப்பட்டு தனது மறைப்பணி வாழ்வால் சிறந்தவர். 53 ஆண்டுகள் இடைவிடா இறைபணி ஆற்றிய நிறைவில், சென்னை மாநகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை முதலில் விதைத்த மகிழ்வில் புனித தந்தை எப்ரேம் தெ நேவேர் தனது 93வயதில் 1695 அக்டோபர் 13ஆம்நாள் மறைந்தார். அவருடைய புனித உடல் புனித ஜார்ஜ்கோட்டைக்குள் அந்திரேயா ஆலய பீடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு எளியவாழ்க்கையும், ஏழைகளோடு தோழமையோடு தம் பணியையும் செய்த தந்தை எப்ரேம் திருச்சபைக்கும், தமிழ் மறைமண்ணிற்கும், கப்புச்சின்சபைக்கும் வரம் என்றால் அது மிகையாகாது.

நன்றி - நம்வாழ்வு