வியாகுல அன்னையின் ஏழு துயரங்கள்

சகோதரி. லூர்து ஐஸ்வரியா - திருச்சி புனித அன்னாள் சபை

1. எருசலேமில் சிமியோன் மரியாவை நோக்கிச் சொன்ன இறைவாக்கு. (லூக்கா 2:34-35)

sorraw -1
மாசின்றி உதித்த மாணிக்கமே
மாபரனின் மங்கா ஜோதியே
மாந்தரின் மகிழ்ச்சியான மகுடமே - நின்
வயிற்றுதித்த பாலகனைக் கண்ணுற
அல்லும் பகலும் ஆருயிர் காத்த
சிமியோன் கண்டுனை வாக்குரைத்தாரே
நீவீர் பெற்ற இறைமனிதம் மானிடர் பலர் 
வீழ்தலுக்கும் வாழ்தலுக்கும் காரணம் என்றாரே!

சிந்தனை:-

பெற்ற மகனின் பாடுகளையும், மரணத்தையும் இறை விருப்பம்! என ஏற்றார் அன்னை. நமது சுயநலப் போக்காலும், வீண் சிந்தனைகளாலும் வருகின்ற தடைகளை, சவால்களை எந்த மனநிலையோடு ஏற்கிறோம். சிந்திப்போம்.

செபம்:

அன்பு அன்னையே! சிமியோன் சொன்ன இறைவாக்கினால் மகனின் மரணத்தை அறிந்து அதை ஏற்றக் கொண்ட உம்மை எம் அன்னையாகக் கண்டு பாவிக்கும் நாங்களும் பிறருக்காக எங்களை உவந்து கையளிக்கவும், தீமைக்குள் சிறைப்பட்டு விடாமல் நன்மை செய்து வாழவும் வரம் தரும். ஆமென்


2 குழந்தையைக் காப்பாற்ற எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் (மத்தேயு 2:13)

sorraw -2

அகிலவன் அமைத்த அமைதியாய் 
ஆண்டவன் காட்டிய இணையிலே, 
அர்ப்பணித்தாயே! அடிமையாய், 
பெற்ற மகனைப் பத்திரமாய், 
வானவர் இட்டக் கட்டளைக்குக் கடந்தனரே, 
கற்களையும் முட்களையும் எகிப்து நோக்கியப் பாதையிலே..

சிந்தனை:-

நம்மை விழத்தாட்டும் (விழச் செய்யும்) சூழல்கள் வரும்போது, அவற்றுக்கும் பலியாகும் பலவீனம் நம்மில் உண்டல்லவா.... இலட்சியத்தில் தெளிவு பெற்ற பயணம் செய்வதில் தான் இயேசுவைப் பின் செல்பவர்கள் ஆகமுடியும் என்பதை ஏற்கிறோமா? சிந்திப்போம்.

செபம்:-

அன்பு அன்னையே பெற்ற மகனின் உயிரைக் காக்க எகிப்துக்குத் தப்பி ஓடிய உம்மை மீட்பின் தாயாகப் போற்றும் நாங்கள் அன்றாடம் எமக்காய் உழைக்கும் எம் பெற்றோரின் அன்பையும், உடனிருப்பையும் உணர்ந்து வாழ வரம் தாரும்.ஆமென்.


3. எருசலேமில் மூன்று நாள் சிறுவன் இயேசு காணாமல் போதல் (லூக்கா 2:43-45)

sorraw -3
மானுடப் பெண்களின் நல்லவரும்
கடவுளின் கொடையுமானக் கன்னியும்
அக்கன்னி ஈன்றக் கனியும், நல்லவர் (யோசேப்பு)
வளர்த்தக் காவியமும் சென்றனரே பாஸ்காவுக்கு,
எருசலேம் பெருநகர் நோக்கி
தன் தந்தை தங்குமிடனெ்றுத் தங்கியே போனரே!
காவியத்தலைவன் குலமுதல்வர் வியக்க
காணவில்லை என்றெண்ணி, கண்டுவிட
கண்டுவிடத் துடித்த நல்லவரும் கன்னியும்
ஆண்டவர் இல்லம் வந்தனரே!
கண்டனரே காற்றின் மொழியை..

சிந்தனை:-

நாமிருக்கும் இடத்தில் நன்மையே விளையும் என நாமே அறியும் வண்ணம் மனத்துணிவுக் கொள்கிறோமா.... நன்மை செய்ய வரும் வாய்ப்புகளையெல்லாம் 'நமக்கேன் வம்பு' என்று தட்டிக் கழிக்கின்றோமா... நல்லது என்று வரும்போது அதைச் செயல்படுத்த "நாம் ஏன்" முந்திக் கொள்ளக் கூடாது? சிந்திப்போம்..

செபம்:-

அன்பு அன்னையே ! ஆண்டவன் இல்லம் தங்கிய மகனைத் தேடிச் சென்ற உம்மைபோல் இலக்கு நோக்கிச் செல்லும் பயணத்தில் தடைகள் வந்தாலும், எதிர்ப்புகள் எதிர்ப்பட்டாலும் மாறாதுத் துணிவுடன் சென்று, எழுந்து நடக்கத் துடிக்கும் உள்ளங்களை ஏற்றிவிட உழைக்கம் கரங்களாகச் செயல்பட எமக்கு அருள் தாரும். ஆமென்.


4. துன்பப் பாதையில் இயேசு சிலுவைச் சுமந்துச் செல்லும்போது அவரைச் சந்தித்தல் (லூக்கா 23:27)

sorraw -4
காவலன் தனக்கமைத்த பாதையில்
தான் சென்றிடக் கள்வர்கள் சூழ்ந்திட
கயவர்கள் அறைந்திடக் கண்மணியின்
கலைஇழநிலைக் கண்டு கண்ணீரில்
மிதந்தாளே பேழையாய் காத்த
மகனின் கோரநிலைக் கண்டு
மௌனியாய் நின்றாளே தம் மகவின்
திட்டத்தில் உறுதுணையானாளே!

சிந்தனை:-

பிறரின் வாழ்வுப் பயணத்தில் உடன்செல்லும் அன்னையாக இருக்கின்றோமா .. தடைச் சொல்லும் தரம் தாழ்ந்த வாழ்வு வாழ்கின்றோமா... நமது உறவுகள் பலன் விளையும் உறவுகளா... பலியாக விரும்பும் அர்த்தமுள்ள உறவுகளா.. சிந்திபோம்..

செபம்:-

அன்பு அன்னையே ! உம்மைப்போல அடுத்திப்பவரின் வாழ்வில் துணை நிற்கும் ஆர்வத்தையும் மாறாத கொள்கையில் நிலைத்து நின்று உம்மைப்போல் உண்மையான மனநிலையையும், உறவுகளில் உளம் பூரிக்கும் மனப்பக்குவத்தையும் எமக்குத் தாரும். ஆமென்.


5. கல்வாரியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறத்தல். (யோவான் 14:25)

sorraw -5
உருக்கலைந்த சிலுவையில் உயர்ந்து
நின்ற மகனை அயர்ந்து நோக்கியே அழுதாள்
ஊட்டிய பால் இரத்தமாய்க் கசிய
உயிரை எடுத்த மனிதர்களின் மீட்புக்காய்
தன் மகவைத் தந்துதவினாளே
பூவுலகின் தாயானாளே.

சிந்தனை:-

வாழ்கின்ற நாட்களில் யாருக்காக வாழ்கிறோம், வாழ்வு முடிந்தபின் யாரில் வாழ்கிறோம்... நமது தியாகச் செயல்களால் எத்தனைப்பேர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிந்திப்போம்.

செபம் :-

அன்பு அன்னையே ! எமக்காக வாழும் நாள்களை எண்ணிப் பெருமிதம் கொள்ளாமல், பிறருக்காகப் பலியாகும் வாய்ப்புகளைப் பெருமையென விரும்பி ஏற்று எங்களையே அர்ப்பணிக்கவும் இயேசுவைப் போல எல்லாரும் வாழ்வுப் பெற உம்மைப்போல், எம்மைக் கையளிக்கவும் வரம் தாரும். ஆமென்.


6. இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல். (மத்தேயு 27:57-59).

sorraw -6
பெற்ற மகவைத் தவழ விட்ட
பேறுபெற்ற மடிப் புன்னகையுடன் அன்று,
வளர்த்த மகவைத் தவழவிட
பொறுப்பேற்ற மடி இன்று
தத்தெடுத்த மானுடத்தைத் தவழவிடும்
அன்னை மடி அன்புடனே என்றும்!

சிந்தனை:-

மகனைப் பலிகொடுத்தபோதிலும் அதில் இறைவருப்பம் ஏற்றுப் பணிந்த மரியா நமக்குப் பாடம் பலியான இறைவனை உள்ளத்தில் ஏற்கும் நாம் பிறரில் நம்பிக்கையை விதைக்கக் கடமைப்பட்டுள்ளோம் என உணர்கிறோமா.. சிந்திப்போம் .

செபம்:-

அன்பு அன்னையே ! மனமுவந்து இறைவிருப்பத்தை ஏற்ற உம்மை, எமது வாழ்வு பாடமாக ஏற்று, நம்பிக்கையில் தளராது வளரவும், எம்மையே பிறருக்காக அர்ப்பணித்து எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் எமக்கு வரம் தாரும். ஆமென்.


7. அரிமத்தியா யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தல் (யோவான் 19:40-42)

sorraw -7
உலகினரின் நிலைகண்டு ஊனுடலாய்
வந்துதித்த வான்மகனை
வழியனுப்பி வைத்தனரே
பூவுடல் புவியனுக்குள்
தங்கிட இடமன்றி - தானடங்க
தயாரித்ததனைத் தந்துதவினாரே
அரிமத்தியா ஊர் யோசேப்பும்

சிந்தனை:-

முடங்கிக் கிடப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல, முயற்சிக்காகக் காத்திருக்கும் முன்னேற்ற வாதிகளாக இருக்க முடியும். நாம் எப்படி வாழ்கிறோம்? சிந்திப்போம்... சில சமயங்களில் நம்மோடு வாழ்வோரின் கனவுகளுக்குக் கல்லறைக் கட்ட நினைக்கிறோம். அக்கனவுகள் வரலாற்றைப் படைக்கக் கூடியவை எனில் அதை அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டாலும் அவை அடங்கிப் போகா... மாறாக முளைத்து எழுந்துச் சாதனைகளாக உருப்பெறும்.

செபம்:-

அன்பு அன்னையே! கொள்கையில் உறுதிக் கொண்டவர்களாக அழிக்க நினைக்கு சக்திகளை அடையாளம் கண்டு எதிர்த்து வெல்லும் ஆற்றல் படைத்தவர்களாக வாழவும், அடுத்திருப்பவருக்குக் கல்லறைக் கட்ட நினைக்கம் கயமைத் தனங்களிலிருந்து விடுபடவும் ஆற்றல் தந்து வழிநடத்தும். ஆமென்.



sunday homily



A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com